×

மணல் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அமைக்க ஒரு மாதம் கெடு: அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

மதுரை: மணல் கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைப்பது குறித்து 30 நாட்களுக்குள் அறிவிப்பு வெளியிட்டால், சம்பந்தப்பட்ட  அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என ஐகோர்ட் கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.  மணல் கடத்தலில் ஈடுபட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட பல்வேறு வாகனங்களை விடுவிக்கக்கோரி ஏராளமானோர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு: மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை விடுவிக்கக் கோரி ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கில், சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். வாகனங்களை விடுவிப்பது குறித்து அந்த சிறப்பு நீதிமன்றமே முடிவு செய்யும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டிருந்தது.

ஆனால் இதுவரை இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.  இதனால் ஏராளமான மனுக்கள் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. எனவே ஐகோர்ட்டின் முந்தைய உத்தரவுப்படி மணல் திருட்டு வழக்குகளை விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்றம் அமைப்பது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு 30 நாட்களுக்குள் வெளியிட வேண்டும். அறிவிப்பு வெளியிடப்படாத பட்சத்தில், அதிகாரிகள் மீது இந்த நீதிமன்றம் தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்கும். இந்த வழக்குகளில் மனுதாரர்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரையில் அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதத்தை செலுத்தியதும், அவரவர் வாகனங்களை விடுவிக்கலாம். இந்த அபராத தொகையை தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களிடம் செலுத்த வேண்டும்.  இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags : court , Sand smuggling, special court, Tamilnadu state, jod
× RELATED போதைப்பொருள் தடுப்பு தொடர்பான அரசின்...